பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல், வாரிசுதாரர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமல் உள்ளதால், தமிழக அரசு புதிய நடைமுறையை அறிவித்துள்ளது.
பட்டா மாறுதல் செய்வதற்காக மக்கள் நாள்தோறும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. மேலும் பட்டா மாறுதல் செய்ய அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகாரும் பெறப்பட்டு வருகிறது. இது ஒருபக்கம் என்றால் பட்டா மாறுதலை எளிதில் பெறும் வகையில் தமிழக அரசும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் பத்திர பதிவு செய்யும் போதே பட்டா மாறுதல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டாலும் அவர்களுக்கு பதிலாக வாரிசுதாரர் அல்லது தற்போது நிலம் வாங்கியவர்கள் பெயரில் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு புதிய நடைமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக நில நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in/என்ற இணையதளத்தின் வாயிலாக பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
இருப்பினும், பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுக்குள் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களின் பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன. எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி,
அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் எதிர்வரும் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments