3% வரை மின்கட்டண உயர்வு: வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை

 தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை 3.16 சதவீதம் வரை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

தமிழ்நாட்டில் வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி, வணிகம், விவசாயம், தொழிற்சாலை என 3.3 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இதில் வீட்டு மின் இணைப்புகள் 2.30 கோடிக்கு மேல் உள்ளது. இந்த இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ஒன்றிய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டிருந்தது.


இந்த திட்டத்தின் படி 2027 வரை ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். 2026-27 ஆண்டு வரை ஆண்டுதோறும் ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. அதன்படி 6 சதவீதம் அல்லது ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். அந்த வகையில் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில், வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றது. வணிக வளாகம், தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 காசு முதல் 21 காசு வரை கட்டணம் உயர்த்தப்பட்டது.


இதையடுத்து 2024 ஆண்டில் 4.83 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு ஜூலை மாதத்திலும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழக மின்சார வாரியத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. கடன், உற்பத்தி உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு நடப்பு ஆண்டு 3.16 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த பரிந்துரை அளித்துள்ளது. இருப்பினும் மின் கட்டணத்தை உயர்த்துவது என்பது அரசின் முடிவு என்பதால் முதல்வர்தான் இது குறித்து இறுதி முடிவு செய்வார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments