இந்தியாவில் பொதுவாக மாணவர்கள் அறிவியல், வணிகம் மற்றும் கலை என்ற மூன்று முக்கியப் பிரிவுகளை தேர்வு செய்கிறார்கள்.
ஒவ்வொரு பிரிவிலும் பல்வேறு வகையான வாய்ப்புகள், சவால்கள் உள்ளன. அந்த வகையில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் தேர்வு செய்ய வேண்டிய துறைகளுக்கான ஆலோசனைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. முதலில் உங்களுக்கு எந்தப் பாடத்தின் மீது உண்மையான ஆர்வம் இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்த்து முடிவு எடுக்க வேண்டும். குறிப்பாக, அறிவியல் சோதனைகள் பிடிக்கும் என்றால் அறிவியல் பிரிவு. எழுத்து அல்லது கலைத்திறன் ஆர்வம் இருந்தால் கலை பிரிவு. வியாபாரம் மீது ஆர்வம் இருந்தால் வணிகப் பிரிவு.
2. ஒவ்வொரு பிரிவும் உங்கள் உயர் கல்வி வாய்ப்புகளை எப்படி பாதிக்கும் என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில், சில உயர்கல்வி படிக்க மேல்நிலைப்பள்ளிகளில் குறிப்பிட்ட பாடங்களை படித்திருக்க வேண்டியது அவசியம்.
3. ஒவ்வொரு பாடத்திலும் உங்கள் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை மதிப்பிட வேண்டும். குறிப்பாக, கணிதம், இயற்பியலில் சிறந்து விளங்கினால் அறிவியல் பிரிவு பொருத்தமாக இருக்கும். பொருளாதாரம் அல்லது வணிகம் போன்ற பாடங்களில் உங்களுக்கு திறன் இருந்தால் வணிகப் பிரிவு பொருத்தமானதாக இருக்கும்.
4. ஒவ்வொரு பிரிவும் வெவ்வேறு தொழில் பாதைகளை வழங்குவதால் உங்களுடைய ஆசைகளை சிந்திக்க வேண்டும். மருத்துவம் மற்றும் பொறியியல் தொழில்களுக்கு அறிவியல் பிரிவு அவசியம். வணிகம் மற்றும் நிதி போன்ற துறைகளுக்கு வணிகப் பிரிவு முக்கியம் என்பதால் உங்கள் ஆசைக்கேற்ப துறையை தேர்வு செய்ய வேண்டும்.
5. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள பாடத்திட்டத்தையும் பாடங்களையும் கவனமாக பார்ப்பதோடு அந்தப் பாடங்களின் தலைப்புகள் உங்களுக்குப் பிடிக்கிறதா, எதிர்கால கல்வி மற்றும் தொழில் இலக்குகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
6. எதிர்காலத்தில் எந்தத் தொழில்களுக்கு அதிக தேவை இருக்கும் என்பதை ஆராய்ச்சி செய்வதோடு, எந்தப் பிரிவு சிறந்த வேலை வாய்ப்புகளையும் நிலையான வருமானத்தை வழங்கும் என்பது பற்றி ஆராய்ந்து வேலை சந்தை மதிப்பிற்கேற்ப தேர்ந்தெடுக்க வேண்டும்.
7. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடைய கருத்து மதிப்பு மிக்கதாக இருந்தாலும் அவர்களுடைய கருத்து உங்கள் தனிப்பட்ட இலக்குகளுக்கு ஒத்துப்போகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம்.
8.ஒவ்வொரு பிரிவிலும் உள்ள கல்வி அழுத்தம் மற்றும் வேலைச்சுமையை உங்களால் கையாள முடியுமா என்பதை யதார்த்தமாக மதிப்பிடுவது நல்லது. சில பிரிவுகள் மற்றவற்றை விட அதிக உழைப்பைக் கோரலாம்.
9. விளையாட்டு, கலை, சமூகப்பணி போன்ற நடவடிக்கைகளில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரிவு உங்களை எவ்வாறு மேம்படுத்தும் என்பதை கவனிக்க வேண்டும்.
10. ஒரு துறையை தேர்ந்தெடுக்கும் முன் ஆசிரியர்கள், பள்ளி ஆலோசகர்கள் உங்களுக்கு ஆர்வமுள்ள துறை நிபுணர்களிடம் ஆலோசனையை கேட்டு சரியான முடிவை எடுக்கவும்.
மேற்கூறிய 10 வழிமுறைகளை கையாண்டு துறையை தேர்ந்தெடுத்தால் எதிர்காலத்தில் அந்தத் துறையில் சிறப்பாக முன்னேறி உங்கள் இலக்கை அடைய முடியும்.
0 Comments