அரசுப்பணி. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு குட் நியூஸ்!

 சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு அடிப்படையில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் 20 சதவிகிதம் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Tamil Nadu government revised students

                                                                            


இதுதொடர்பாக, தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அரசாணையில்,


"தமிழ்நாடு அரசுப் பணிநியமனங்களில், நேரடி நியமனத்திற்கான காலிப்பணியிடங்களில், இருபது விழுக்காடு (20%) பணியிடங்களை தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண். 82-ல், பத்தி 4-இல் (I) முதல் (xi) வரை உள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குப் பதிலாக பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றியமைத்து ஆணையிடுகிறது.


1. ஒன்றாம் வகுப்பு முதல், தொடர்புடைய பணி விதிகளில் நேரடி நியமன முறைக்கென வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரையில் முழுவதுமாக தமிழ்வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அச்சட்டத்திற்கான 2020-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட தகுதியுடையவர்கள் ஆவர்.


2. இதர மொழிகளை பயிற்று மொழியாக (Medium of instruction) கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.


3. ஒன்றாம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று, பின்னர் தமிழ் நாட்டில் தங்களது கல்வியினை, சேரும் வகுப்பிலிருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களும் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர்.


நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் பயின்ற சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும்.


அதாவது, பள்ளிக் கல்வியைப் பொறுத்தமட்டில், சம்பந்தப்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும், உயர்கல்வியைப் பொறுத்தமட்டில் தொழிற்பயிற்சி நிலையம் / கல்லூரி / பல்கலைக்கழக முதல்வர் / பதிவாளர் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.


மேற்படி சான்றிதழ்கள் பணியில் உள்ள அலுவலர்களால் மட்டும் அளிக்கப்படவேண்டும் எனவும், ஓய்வுபெற்ற அலுவலர்களால் அளிக்கப்படக்கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.


4. பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக தனித்தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் அல்லர்.


5. பள்ளிக்குச் சென்று பள்ளியில் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு போன்ற பொதுத்தேர்வுகள் எழுதி, அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல், தனித்தேர்வராக தேர்வெழுதி அப்பாடங்களில் தேர்ச்சி பெற்று, தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர்.


அதாவது, பள்ளிக் கல்வியைப் பொறுத்தமட்டில், சம்பந்தப்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் தனித்தேர்வைப் பொறுத்தமட்டில் இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும், உயர்கல்வியைப் பொறுத்தமட்டில் தொழிற்பயிற்சி நிலையம் / கல்லூரி / பல்கலைக்கழக முதல்வர் / பதிவாளர் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.


6. கல்வித் தகுதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட பணியாளர் தெரிவு முகமைகள் (Recruiting Agencies) / பணிநியமன அலுவலர்கள் (Appointing Authorities) உறுதி செய்து கொள்ள வேண்டும்.


7. விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்படும், தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களின் உண்மைத்தன்மையினை சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலம் பணியாளர் தெரிவு முகமைகள் (Recruiting Agencies) / பணிநியமன அலுவலர்கள் (Appointing Authorities) உறுதி செய்து கொள்ள வேண்டும்.


8. தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளின் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை உறுதி செய்ய இயலாத நிலையில், தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை, இணைப்புகள்-1 மற்றும் II-ல் உள்ள படிவங்களில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.


9. பள்ளிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் / உரிய அலுவலரிடமிருந்தும், கல்லூரிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், அக்கல்லூரிகள் ஏற்கனவே இணைவு பெற்றிருந்த பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்தும், தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை தேர்வர்கள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.


10. தொடக்க நிலை (ஐந்தாம் வகுப்பு), உயர்நிலை (பத்தாம் வகுப்பு), மேல்நிலை வகுப்பு (பன்னிரண்டாம் வகுப்பு), பட்டயம் (Diploma), இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் ஆகிய கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் மாற்றுச் சான்றிதழ்களில் (Transfer Certificate) மாணவர்களின் பயிற்று மொழி (தமிழ் / ஆங்கிலம் / இதர மொழிகள்) கட்டாயம் குறிப்பிடப்படும்.


11. தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதி பெற்றவர்களை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் மற்றும் தமிழ் பாடத்திலும், மாறுபட்ட வேறு ஒரு பாடத்திலும் (Cross Major Subject Degree in Tamil) பட்டம் பெற்றவர்களை தமிழ் ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யக் கூடாது என்பதற்கான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகள் நடவடிக்கை மேற்கொள்ளும்.


மேற்படி சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ள 20 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீடானது, நேரடி பணி நியமனத்திற்கான ஒவ்வொரு தெரிவு நிலையிலும் (முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் இதர நிலைகள்) பதவி வாரியாக பின்பற்றப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Tamil Nadu government revised students

Post a Comment

0 Comments