பட்டா, சிட்டா என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? சொத்து வாங்குபவர்கள், தங்களுக்கு தேவையான ஆவணங்களை ஆன்லைனிலேயே பெற முடியுமா?
பட்டா, சிட்டா முக்கியத்துவம் என்ன? தமிழக அரசு கொண்டுவந்துள்ள, எங்கிருந்தும், எப்போதும் இணையவழி சேவையின் மற்ற பயன்கள், வசதிகள் என்னென்ன தெரியுமா? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ஒருவர் தன்னுடைய சொத்துக்கள் மீதான உரிமையை சட்டரீதியாக நிரூபிக்கும் ஆவணத்தின் பெயர்தான் பட்டா எனப்படும்.. பட்டா எண், மாவட்டம், வட்டம், கிராமம், மற்றும் நில உரிமைதாரரின் பெயர், சர்வே எண், உட்பிரிவு, நன்செய் நிலம்/புன்செய் நிலம், நிலம் அமைந்துள்ள பகுதி, தீர்வை விவரங்கள் அனைத்துமே இந்த சட்டப்பூர்வமான ஆவணத்தில் பதிவாகியிருக்கும்.
பட்டா, சிட்டா என்றால் என்ன
பட்டாவின் ஒரு பகுதியே சிட்டா என்பார்கள்.. அதாவது, பட்டாவில் தரப்பட்டுள்ள தகவல்களுடன், சற்று கூடுதல் தகவல்கள் சிட்டாவில் இடம்பெற்றிருக்கும்..
உதாரணத்துக்கு ஒருவரின் சொத்துக்கள் எங்கே? எந்த பகுதியில் அமைந்துள்ளது? சொத்தின் அளவு என்ன? நிலத்துக்கு உரிமையாளர் யார்? நஞ்சை நிலமா? புஞ்சை நிலமா? வறண்ட நிலமா? ஈர நிலமா? நிலம் அமையப் பெற்றுள்ள மாவட்டம், வட்டம், கிராமம், பட்டா வகை, பயன்பாட்டில் உள்ளதா, தீர்வை விவரங்கள் என மொத்த விவரமும் சிட்டாவில் இடம்பெற்றிருக்கும்
ஆன்லைனில் ஏராளமான வசதிகள்
சொத்தின் உரிமையாளர்கள், தங்களது நிலம் தொடர்பான மிக முக்கிய ஆவணங்களான பட்டா, சிட்டாக்களை எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கும் செய்யும் வசதியை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதனை பொதுமக்கள் வரவேற்று வருகிறார்கள்.
ஏனென்றால், ஏதாவது ஒரு ஆவணம் தேவைப்படுகிறதென்றால், நேரடியாகவே அரசு அலுவலகத்துக்கு செல்ல வேண்டியிருந்தது.. இதற்கான விண்ணப்பங்களை எழுதித்தர வேண்டும்.. பிறகு, அதிகாரிகள் சொல்லும் நாளில், மீண்டும் நேரில் செல்ல வேண்டும்.. ஒருவேளை அலுவலகம் செல்பவராக இருந்தால், இதற்காகவே விடுமுறை எடுத்து கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இதனால், பணமும், கால நேரமும், விரயமாகி கொண்டிருந்தன
இதுபோக, இடைத்தரகர்களுக்கும் பணத்தை தர வேண்டியிருந்தது.. தற்போது அனைத்து ஆவணங்களும் இணையத்தில் பதிவாகியிருப்பதால், சில நிமிடங்களிலேயே பணிகளை முடித்துவிட முடிகிறது. பணமும், நேரமும் மிச்சமாகிறது.
பட்டா, சிட்டா அவசியங்கள்
அந்தவகையில், பட்டா, சிட்டா போன்ற ஆவணத்தையும் ஒரு நிமிடத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.. ஒரு விவசாய நிலத்தை விற்பனை செய்ய வேண்டிய நிலைமை வந்தால் அல்லது கட்டிடத்துடன் கூடிய இடத்தை விற்பனை செய்ய வேண்டிய நிலைமை வந்தால், பட்டா சிட்டா அவசியம் தேவை.. இந்த பட்டா சிட்டா இருந்தால்தான், ஒரு நிலத்தை வாங்கவோ, விற்கவோ முடியும். வங்கிகள் மூலம் சொத்தின் பேரில் கடன் பெறுவதற்கு, இந்த பட்டா, சிட்டா ஆவணம் தேவைப்படுகிறது.
அதேபோல, இயற்கை சீற்றத்தினால் நிலம் பாதிப்படைந்தாலோ அல்லது நிலத்தினை அரசு உபயோகத்திற்காக எடுத்துக் கொண்டாலோ அதற்கான இழப்பீட்டை பெறுவதற்கும் பட்டா - சிட்டா ஆவணம் தேவைப்படுகின்றன.
பட்டா, சிட்டாவை ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
- https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிற்குள் நுழைய வேண்டும்
- பட்டா & புலப்படம் / சிட்டா / நகர நில அளவைப் பதிவேடு விவரங்களை பார்வையிடுவதற்கான ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இப்போது ஸ்கிரீனில் தென்படும் தேர்வுகளை பூர்த்தி செய்துவிட்டு, மாவட்டம், வட்டம், கிராமம், பட்டா /சிட்டா விவரங்களை பார்வையிட அங்கீகார மதிப்பையும் உள்ளிட வேண்டும்
- பிறகு செல்போன் நம்பரை பதிவு செய்ததுமே, மெசேஜ்ஜுக்கு வரும் ஓடிபி நம்பரை உறுதிப்படுத்த வேண்டும்
- இப்போது உள்ளீடு தரவுகள் இயக்கப்பட்டு அதற்கான சிட்டா ஸ்கிரீனில் தோன்றும். சிட்டா சான்றிதழை சரிபார்த்ததுமே, அதன்கீழுள்ள "Print" ஆப்ஷனை கிளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
0 Comments