தமிழ்நாடு முழுவதும் அரசு இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இதில், இருப்பிடச் சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், சொத்து சான்றிதழ், ரேஷன் கார்டு புதிய விண்ணப்பம், திருத்தம், பெயர் சேர்க்கை,ஆதார் சேவைகள், புதிய ஆதார், புதுப்பித்தல், திருத்தம் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் (DL), RC புத்தகம், பதிவு சான்றிதழ், GST பதிவு, கடை லைசென்ஸ், மின்சார கட்டணம், வீட்டு வரி விண்ணப்பம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
பொதுமக்கள் தங்கள் தேவைகள் எதுவாக இருந்தாலும் இ-சேவை மையங்கள் சென்றால் போதும். ஒரே இடத்தில் அரசுக்கு கோரிக்கை மனுவாக விண்ணப்பிக்கலாம். இதற்காக சொற்ப தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த சூழலில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் (ம) அரசு இ.சேவை மையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பட்டா மற்றும் இதர சான்றுகள் கோரி விண்ணப்பம் செய்யவரும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்ப கட்டணமாக அரசு நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதலாக ரூபாய் 200 வரை கோரப்படுகிறது என புகார் வந்துள்ளது.
மேலும் பட்டா மற்றும் இதர சான்றுகள் கோரி வரும் பொது மக்களிடம் தாங்களே சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து பட்டா மற்றும் சான்றுகளைப் பெற்று தருவதாக கூறி அதன் மூலம் அதற்கு ஈடாக தொகையினை பெறுகின்றனர் எனவும், மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்களிடமிருந்து தொடந்து புகார்கள வந்த வண்ணம் உள்ளன. விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்ப கட்டணத்தை விட கூடுதலான தொகையினைபெறுவதும்,பட்டா மற்றும் இதர சான்றுகள் பெற்று தருவதாக இடைத்தரகர் பணிமேற்கொள்வதும் சட்டத்திற்கு புறம்பானது ஆகும். எனவே, இது போன்ற புகார்கள்வரப் பெரும் சம்மந்தப்பட்ட இசேவை மையங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
மேலும் சம்மந்தப்பட்ட நபர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனவும். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர்களும் தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் இ -சேவை மையங்களில் கண்காணிப்பு பணிமேற்கொண்டு, மேற்படி புகார்கள் வராத வண்ணம் உரியநடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக புகார்கள் இனிவரும் காலங்களில் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் / விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக 0442062455 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
0 Comments