அரசின் சேவைகளை மக்களுக்கு எடுத்து செல்லும் நோக்கில் தொடங்கப்பட்ட இ சேவை மையங்களை, நகரப்புறங்களில் ஒரு கிமீ தூரத்திற்குள் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
அதேபோல, கிராமப்புறங்களில் 2 முதல் 3 கிமீ தூரத்திற்குள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவலை தமிழக ஐடி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டுள்ளார்.
சாதி சான்றிதழ் டூ கலப்பு திருமண சான்றிதழ்:
அரசின் சேவைகளை மக்கள் எளிதாக பெறும் நோக்கில் இ சேவை மையங்கள் அமைக்கப்பட்டன. சாதி சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், ஆண்டு வருமான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ் உள்ளிட்டவற்றை இ சேவை மையம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து மக்கள் பெற்று கொள்ளலாம்.
தமிழ்நாடு மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் பல பெயர்களில் இ சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவிலேயே முதல்முறையாக ஆந்திரப் பிரதேசத்தில்தான் இ சேவை திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 1999ஆம் ஆண்டு, ஆந்திரப் பிரதேசத்தில் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்தபோது, ஹைதராபாத்தில் இ சேவை திட்டம் தொடங்கப்பட்டது.
முதன்முதலில் மின்சார கட்டணம், டெலிபோன் பில், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளை மட்டும் வழங்கி வந்தது. பின்னர், பல மாநிலங்கள், இசேவை திட்டத்தை தொடங்கி பல்வேறு சேவைகளை வழங்கும் நோக்கில் விரிவுப்படுத்தப்பட்டது. இருப்பினும், இ சேவை மையங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. எனவே, அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இனி ரொம்ப தூரம் அலைய வேண்டாம்!
அந்த வகையில், இ சேவை மையங்களை, நகரப்புறங்களில் ஒரு கிமீ தூரத்திற்குள் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. அதேபோல, கிராமப்புறங்களில் 2 முதல் 3 கிமீ தூரத்திற்குள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின்போது நேற்று பேசிய தமிழக ஐடி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்த தகவலை வெளியிட்டார்.
அப்போது, இ சேவை மையங்களின் வளர்ச்சியை பாராட்டி பேசிய அமைச்சர், "முந்தைய ஆட்சி காலத்தில் 7,000 இ சேவை மையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது, 28,000 இ சேவை மையங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் இ சேவை மையத்திற்காக எந்த ஒரு நபரும் 2 முதல் 3 கிமீ தூரத்திற்கு மேல் பயணம் செய்ய கூடாது என்பதை உறுதி செய்வதே அரசின் இலக்கு. நகரப்புறங்களில் ஒரு கிமீ தூரத்திற்குள் இ சேவை மையங்கள் இருக்க வேண்டும்" என்றார்.
0 Comments