இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ஏப்ரல் 21, 2025 அன்று ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், தாங்களாகவே வங்கி சேமிப்பு மற்றும் கால வைப்பு கணக்குகளைத் திறக்கவும், இயக்கவும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, இந்தியாவில் சிறுவர்களுக்கு நிதி சுதந்திரத்தை வழங்கும் ஒரு முன்னோடியான மாற்றமாக பார்க்கப்படுகிறது. இது நாள் வரையில் பெற்றோர் அல்லது காப்பாளர்கள் உதவியுடனே மைனர்கள் வங்கி சேவையை பயன்படுத்தி வந்த நிலையில், விதிமுறைகள் தளர்த்தப்பட்டு புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது.இன்றைய டிஜிட்டல் யுகத்தில், குழந்தைகள் கூட செலவுகளை கவனிக்க, போனில் பேமெண்ட் செய்ய, UPI பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். ஆனாலும், அவர்களுக்கான தனிப்பட்ட வங்கி கணக்குகள் பற்றிய சட்ட வழியான சுதந்திரம் குறைந்த அளவில் இருந்தது. இதை சரி செய்யும் வகையில், இந்த அறிவிப்பு சிறுவர்களின் நிதி ஒழுக்கத்தையும், சுயநிலையையும் மேம்படுத்தும்.RBI வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி, 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்கள், சொந்தமாக சேமிப்பு மற்றும் கால வைப்பு கணக்குகளை வங்கிகளில் துவக்கலாம்.
இவர்கள் guardian அல்லது பெற்றோர்கள் இல்லாமலேயே, தாங்களாகவே இந்த கணக்குகளை இயக்கலாம். இதற்காக வங்கிகள் தங்களது இடர் மேலாண்மை கொள்கையின் (risk management policy) அடிப்படையில், கணக்குகளில் இருப்பு அளவு, பணம் எடுக்கும் வரம்பு போன்ற கட்டுப்பாடுகளை அமைக்கலாம்.இந்த சுதந்திரத்தின் மூலம், 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்களுக்கு சில வசதிகள் வழங்கப்படும், ATM / டெபிட் கார்டுகள் (வங்கியின் அனுமதியுடன்), இணைய வங்கி வசதி, மொபைல் பேமெண்ட் செயலிகள், காசோலை புத்தகம், பணம் செலுத்துதல் மற்றும் எடுக்கும் சுயசேவை, இந்த வசதிகள் அனைத்தும், வங்கி அவர்களின் வாடிக்கையாளர் பொருத்தம், தயாரிப்பு பொருத்தம் ஆகிய அடிப்படையில் வழங்க முடியும்.இக்கணக்குகளில் சில கட்டுப்பாடுகளும் உள்ளன.சிறுவர்கள் தாங்களாகவே பணம் எடுக்கலாம் என்றாலும், அளவுக்கு மேற்பட்ட பணம் எடுக்க அனுமதியில்லை. மேலும், இந்த கணக்குகளில் எப்போதும் நீதியிருக்கும் இருப்பு (positive balance) வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது, தவறான நிதி பழக்கங்களைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த சுற்றறிக்கையில், 10 வயதிற்கு குறைந்த வயதுடைய சிறுவர்கள், தாங்களாகவே வங்கி கணக்குகளைத் திறக்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறுவர்களுக்கான வங்கி கணக்குகள், அவர்களது இயற்கை அல்லது சட்டபூர்வ பாதுகாவலர் மூலமாகவே திறக்கப்பட வேண்டும். பொதுவாக, பெற்றோர் அல்லது பாட்டி, தாத்தா போன்ற உறவினர்கள் இந்த guardian ஆக இருக்கலாம்.எப்போது ஒரு மைனர் 18 வயதை பூர்த்தியடைகிறாரோ அப்போது, வங்கிகள் அந்த கணக்கின் நிலையை முழுமையான சுயாதீன கணக்காக மாற்றவேண்டும். அதற்கு, புதிய மாதிரி கையொப்பம், புதிய KYC ஆவணங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இது கணக்கின் பாதுகாப்பையும் சட்டப்பூர்வத்தையும் உறுதி செய்யும்.இந்த சுற்றறிக்கையில், வங்கிகள் அவர்களது தனிப்பட்ட கொள்கைகளின்படி சிறுவர்களுக்கான கணக்குகளில் பல்வேறு வசதிகளை வழங்கலாம் எனவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, எல்லா சிறுவர்களுக்கும் ஒரே மாதிரியான சலுகைகள் தேவையில்லை. ஒவ்வொரு வங்கியும், தங்களது risk policy, கணக்குத்தாரரின் செயல்பாடுகள், மற்றும் வாடிக்கையாளர் வகை ஆகியவற்றை கொண்டு கணக்குகளை இயக்கு விதிமுறைகளை தீர்மானிக்கலாம்.RBI வங்கிகளுக்கு ஜூலை 1, 2025 க்குள், தங்கள் வங்கிக் கொள்கைகளை புதுப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. புதிய அல்லது ஏற்கனவே திறக்கப்பட்ட சிறுவர்களின் கணக்குகளுக்கான நடைமுறைகள் அனைத்தும் இந்த தேதி வரை அமுலுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.இது யாருக்கு பயனுள்ளதாக இருக்கும்?: பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள், சிறு தொழில் செய்து வருகிற சிறுவர்கள், பொருளாதாரத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பண மேலாண்மை பழக்கவழக்கத்தை ஏற்படுத்த விரும்புபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இந்த புதிய அறிவிப்பின் மூலம், சிறுவர்கள் சிறுவயதிலேயே வங்கி சேமிப்பு, செலவுத்திட்டம், ATM பயன்பாடு, ஆன்லைன் பேமெண்ட், நிதி கட்டுப்பாடு போன்றவைகளை கற்றுக்கொள்ள முடியும். இது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உறுதியான அடித்தளமாக அமையும்.
நிதி ஒழுக்கம், குடும்பச் செலவுகள், வருமான மேலாண்மை போன்றவைகளில் பங்கு பெறும் பயிற்சி பள்ளி காலத்திலேயே தொடங்கும் வாய்ப்பு இது.RBI வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவிப்பு, இந்திய நிதி அமைப்பில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. சிறுவர்கள் தாங்களாகவே வங்கி கணக்குகளை இயக்கும் உரிமை என்பது, அவர்களின் தனிப்பட்ட நிதி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும். இது, இந்தியாவின் நிதிச் சேர்ப்பு (Financial Inclusion) நோக்கத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு நிலையான படியாக அமையும். வங்கிகள் மற்றும் பெற்றோர், இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, சிறுவர்களுக்கு நிதி ஒழுக்கம் மற்றும் வங்கி நாகரிகம் குறித்து அறிவூட்ட வேண்டும்.
0 Comments