சென்னை: ஒருவர் இறந்து பல ஆண்டுகள் ஆகியும் அவர்களது வாரிசுகள், வாரிசு சான்றிதழ் பெறாத நிலையில், வட்டாட்சியர் வாரிசு சான்றிதழ் அளிப்பது எப்படி? என்பது தொடர்பான மிக முக்கியமான உத்தரவு ஒன்றினை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
வாரிசு சான்றிதழ் என்பது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. வட்டாட்சியரால் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. சொத்து பதிவு, சொத்துக்களை வாங்கும் போது மிகவும் தேவைப்படும் சான்றிதழ்களில் ஒன்றாக வாரிசு சான்றிதழ் உள்ளது. உரிமையாளரின் திடீர் மறைவின் போது ஒரு சொத்து அல்லது சொத்தின் உரிமைக்கான பொருத்தமான வாரிசை தீர்மானிக்க இந்த ஆவணம் அவசியமானது.
சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒருவர் இறந்துவிட்டால், அவரது வாரிசுகள் ஓர் ஆண்டுக்குள் விஒஏவை அணுகி வாரிசு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். ஓர் ஆண்டு கடந்துவிட்டால் வட்டாட்சியரிடம் வாங்கலாம். இறந்து 7 ஆண்டுகள் கடந்து விட்டால், சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தாங்கள்தான் வாரிசுகள் என்று அறிவிப்பு உத்தரவை பெறவேண்டும். இந்த நிலையில், வாரிசு சான்றிதழ் பெறும் விவகாரத்தில் முக்கிய உத்தரவு ஒன்றினை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதாவது, நண்பர்கள், உறவினர்கள் என்று 5 பேர் இவர்கள்தான் வாரிசுகள் என்று பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தால், அதன் அடிப்படையில் வாரிசு சான்றிதழை கொடுக்கலாம் என்று வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விவரங்களை பார்க்கலாம். வட்டாட்சியரிடம் மனு திருவல்லிக்கேணி கஜபதி தோட்டத்தில் சி பிசுப்பிரமணி என்பவருக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டது. கடந்த 1998-ம் ஆண்டு சுப்பிரமணியும், பின்னர் பல்வேறு ஆண்டுகளில் அவரது மனைவி, 2 மகன்களும் இறந்து விட்டனர். தற்போது, அவரது மகன் அரசும், மகள்கள் சாந்தகுமாரி, மேனகா ஆகியோர் மட்டுமே உள்ளனர். இவர்கள் சுப்பிரமணியின் வாரிசுகள் என்று சான்றிதழை உடனடியாக பெறவில்லை.
இந்த நிலையில்தான், குடிசை மாற்று வாரியம் ஒதுக்கிய நிலத்திற்கு அரசு பட்டா வழங்க தொடங்கியது. அப்போது, வாரிசு சான்றிதழ் இல்லை என்பதால் மேற்கூறியவர்களுக்கு பட்டா வழங்க அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து, வாரிசு சான்றிதழ் கோரி மயிலாப்பூர் வட்டாட்சியரிடம் அரசு என்பவர் மனு அளித்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து வாரிசு சான்றிதழ் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு என்பவர் மனு தாக்கல் செய்தார்.
பிரமாண பத்திரம் தாக்கல் செய்யலாம்
இந்த மனு நீதிபதி டி பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறிப்பிட்ட காலத்திற்குள் வாரிசு சான்றிதழ் பெற வேண்டும் என்ற விவரம் மனுதாரருக்கு தெரியவில்லை என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-
வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்ட காலம் தாண்டி விண்ணப்பிக்கும் போது, அவர்களிடம் போதிய ஆதாரம் இல்லை என்றால் அவர்களை பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய அதிகாரிகள் உத்தரவிடலாம். விண்ணப்பதாரர்கள், தங்களது குடும்ப நண்பர்கள், உறவினர்கள் என்று 5 பேர்களிடம் இருந்தும், இவர்கள்தான் வாரிசுதாரர்கள் என்ற தனித்தனி பிரமாண பத்திரங்களை பெற்று தாக்கல் செய்யவேண்டும். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், இருக்கிற ஆவணங்களின் அடிப்படையில் வாரிசு சான்றிதழை வழங்கலாம்.
0 Comments