அகவிலைப்படி 2% வரை உயர்வு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த குட்நியூஸ்! சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

 மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை இன்று 2 சதவீதம் வரை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.


                                                                              


இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி என்பது 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் எவ்வளவு சம்பளம் அதிகரிக்க உள்ளது? எவ்வளவு பேர் பயன்பெற உள்ளனர்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.


மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இதனை சுருக்கமாக டிஏ (Dearness Allowance) என்பவார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும். அதாவது நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அகவிலைப்படி என்பது மாற்றி அமைக்கப்படும்.

இன்னும் சொல்லப்போனால் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரி சதவீதத்தின் அடிப்படையில் பணவீக்கத்தை பொருத்து அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின்படி ஒவ்வொரு 6 மாதத்துக்கும் ஒருமுறை அகவிலைப்படி என்பது வழங்கப்படும்.


நம் நாட்டை பொறுத்தவரை ஜனவரி மற்றும் ஜுலை மாதங்களில் அகவிலைப்படி என்பது வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு என்பது தாமதமாகும். அதன்பிறகு முன்தேதியிட்டு அரியர்ஸ் தொகையுடன் அகவிலைப்படி என்பது வழங்கப்படும்.

இந்நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் வரை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி என்பது 53 சதவீதமாக உள்ளது. தற்போது 2 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி என்பது 55 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த 2 சதவீத அகவிலைப்படி உயர்வு என்பது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. அப்போது ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத அகவிலைப்படி அரியர்ஸ் உடன் வழங்கப்பட உள்ளது.

இந்த அகவிலைப்படி மூலம் நாடு முழுவதும் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் என்று மொத்தம் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைய உள்ளனர். மேலும் தற்போதைய 2 சதவீத அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசு ஊழியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரம் எனும் போது அவருக்கு மாதம் ரூ.360 அகவிலைப்படியாக கிடைக்கும். அப்படி பார்த்தால் ஒரு ஆண்டில் ரூ.4,320 வரை கிடைக்கும்

அதேபோல் ஓய்வூதியதாரர்களை எடுத்து கொண்டால் அடிப்படை பென்சன் ரூ.9 ஆயிரமாக இருக்கும்போது அவர்களுக்கு மாதம் ரூ.180 அதிகரிக்கும். இதன்மூலம் பார்த்தால் ஆண்டுக்கு ரூ.2,160 வரை கூடுதலாக கிடைக்கும். இருப்பினும் மத்திய அரசு ஊழியர்கள் 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் மத்திய அரசு 2 சதவீதம் வரை மட்டுமே உயர்த்தி உள்ளதால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.







Post a Comment

0 Comments