சிலிண்டர் விலை முதல் காப்பீட்டு பிரீமியம் வரை.. மார்ச் 1 முதல் இதெல்லாம் மாறி இருக்கு தெரியுமா?

Follow Us

சிலிண்டர் விலை முதல் காப்பீட்டு பிரீமியம் வரை.. மார்ச் 1 முதல் இதெல்லாம் மாறி இருக்கு தெரியுமா?

 சென்னை: 2025ஆம் நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச் மாதம் தொடங்கி இருக்கிறது. இந்த மாதத்தில் இருந்து பல்வேறு நிதி சார்ந்த மாற்றங்களும் அமலுக்கு வந்துள்ளன. அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

                                                               



சிலிண்டர் விலை: மாதந்தோறும் 1ஆம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் அறிவிக்கப்படும். இதன்படி நாடு முழுவதும் வணிக சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை 1959.50 ரூபாயில் இருந்த 1965 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களை பொறுத்தவரை எந்தவித விலை மாற்றமும் இல்லை.

நாமினி நியமன முறையில் மாற்றம்: மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு செபி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி மார்ச் 1ஆம் தேதி முதல் மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள் தங்கள் கணக்குகளுக்கு 10 பேர் வரை நாமினிகளாக நியமனம் செய்ய முடியும். மேலும் ஒரு கணக்கிற்கு குறைந்தது ஒரு நாமினியாவது முதலீட்டாளர்கள் நியமனம் செய்திருக்க வேண்டும். அந்த நாமினியின் ஆதார் மற்றும் பான் எண் உள்ளிட்ட முக்கிய விபரங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதுவும் மார்ச் 1ஆம் தேதியிலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு பிரீமியம்: 

ஐஆர்டிஏ காப்பீட்டு திட்டங்களுக்காக செலுத்தும் பிரீமியம் தொகைகளை யுபிஐ நடைமுறையில் செலுத்தும் புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. இதன்படி பாலிசிதாரர்கள் Bima-ASBA என்ற வசதி மூலம் யுபிஐ செயலிகள் வாயிலாக காப்பீட்டு பிரீமியம் தொகையை பிளாக் செய்து கொள்ளலாம். அவர்களுடைய பாலிசி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு இந்த கட்டணமானது சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு செல்லும். ஒருவேளை காப்பீட்டு நிறுவனம் இந்த காப்பீட்டு பிரபோசலை ஏற்கவில்லை என்றால் பிளாக் செய்யப்பட்ட தொகையானது மீண்டும் உங்கள் கணக்கிற்கே வந்து விடும்.

ஈபிஎஃப்ஓ ஆதார் இணைப்பு: 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களுடைய யூஏஎன் (UAN) எனப்படும் யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பரையும், வங்கி கணக்கையும் ஆதாரோடு இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே ஈபிஎஃப்ஓ-வில் கணக்கு வைத்திருப்பவர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். மார்ச் 15ஆம் தேதிக்குள் ஆதாரையும் யூஏஎன் எண்ணையும் வங்கி கணக்கோடு இணைத்துவிட வேண்டும் இல்லையெனில் குறிப்பிட்ட சில வசதிகளை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

14 நாட்கள் வங்கி விடுமுறை: 

மார்ச் மாதத்தை பொறுத்தவரை வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே மக்கள் அதற்கு ஏற்றபடி தங்களுடைய வங்கி சம்பந்தப்பட்ட பணிகளை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.



Post a Comment

0 Comments