புதுடெல்லி: ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க இந்திய வங்கிகளுக்கு 'bank.in' என்ற பிரத்யேக டொமைனை அறிமுகப்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்ட தகவல்: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு (MPC) ரெப்போ விகிதத்தை, அதாவது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25 சதவீதமாக குறைத்துள்ளது.
ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் அதிகரித்து வரும் சைபர் மோசடி சம்பவங்கள் கவலை தருவதாக இருக்கிறது. இதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க இந்திய வங்கிகளுக்கு 'bank.in' என்ற பிரத்யேக டொமைனை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான ரிஜிஸ்ட்ரேஷன் ஏப்ரல் 2025-ல் மாதம் தொடங்கும். அதோடு, எதிர்காலத்தில், நிதித்துறையில் உள்ள பிற வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ".fin.in" என்ற பிரத்யேக டொமைனை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வங்கி தொழில்நுட்பத்தில் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனம் (IDRBT) இந்த டொமைன்களுக்கான பிரத்யேக பதிவாளராக செயல்படும். இந்த முயற்சி சைபர் குற்றங்களுக்கு எதிரான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஆன்லைன் மோசடிகளை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குறித்து வங்கிகளுக்கான விரிவான வழிகாட்டுதல்கள் தனித்தனியாக வெளியிடப்படும்” என்று அவர் கூறினார்.
0 Comments