சென்னை: கடன் அடமான பத்திரங்களை ரத்து செய்யும் ஆவணம் ஆகியவற்றை, ஆன்லைன் முறையில் பதிவு செய்யலாம். இந்த பத்திரங்களை பொறுத்தவரை, இதில் சம்பந்தப்பட்டவர்கள் சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வராமல், ஆன்லைன் முறையில் தாக்கல் செய்தால் போதும்.
கடன் கணக்கு முடிப்பது உள்ளிட்ட இனங்களில் தேவைப்படும் ஆவணங்களை பதிவு செய்வதில், எவ்வித பரிமாற்றமும் இல்லை என்பதால், இப்பணிகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டன. ஆனால், இவ்வாறு தாக்கலாகும் ஆவணங்களை சார் - பதிவாளர்கள் திருப்பி அனுப்புவதாக, புகார் கூறப்படுகிறது.
பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ள உத்தரவு:
கடன் கணக்கு முடித்தல் உள்ளிட்ட, குறிப்பிட்ட சில இனங்களில்
ஆவணங்களை, 'ஆன்லைன்' முறையில், மக்கள் தாக்கல் செய்கின்றனர்.
இதில், ஆதார் வழி அடையாளம் சரி பார்க்கப்பட்டதை, சார் - பதிவாளர்கள் ஏற்க வேண்டும்.
ஆன்லைன் முறையில் தாக்கலானதை அதிகாரப்பூர்வமானதாக ஏற்று,
அதை அதே நாளில் பதிவு செய்ய வேண்டும். அதில் கூடுதல் விபரங்கள்
ஏதாவது தேவைப்பட்டால், அடுத்த நாள் முதல் ஆவணமாக, அதை பதிவு
செய்ய வேண்டும். இவ்வாறு ஆன்லைன் வழி ஆவணங்களை பதிவு செய்த
பின்னரே, மற்ற நேரடி பத்திரங்களை பதிவு செய்ய வேண்டும். உரிய காரணங்கள் இன்றி, இத்தகைய பத்திரங்களை திருப்பி அனுப்பக் கூடாது.
உரிய காரணம் இருந்தாலும், ஒரு முறைக்கு மேல் இதற்கு திருப்பி அனுப்புவதற்கான ரசீதை பயன்படுத்தக் கூடாது. தேவையில்லாமல், ஆவணதாரர்களை நேரில் வர வற்புறுத்தக் கூடாது. இதில் கையொப்பம்
இட்ட ஆவணம் இல்லை என்பதை புரிந்து, சார் - பதிவாளர்கள் செயல்பட
வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
0 Comments