உதகை: நீலகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘சைபர் பள்ளிக்கூடம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கணினி அல்லது இணைய சேவை மூலமாக நடைபெறும் குற்றங்கள் அனைத்தும் சைபர் குற்றங்கள்.
ஆரம்பத்தில் வங்கியில் இருந்து பேசுவதாகவும், ஓ.டி.பி. எண்ணை தெரிவிக்குமாறும் கூறி மோசடி செய்தனர். தற்போது புதிது, புதிதாக மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், சைபர் குற்ற வழக்கு விசாரணையில் நாடு முழுவதும் ஒருங்கிணைப்பு தேவை என்பதற்காக, இந்தியா 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகியவை தென் மண்டலத்தில் உள்ளன. இதேபோல், சைபர் குற்றங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைபர் கிளப் தொடங்க அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சைபர் கிளப் தொடங்கப்பட்டு, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்-அப் குழு தொடங்கப்பட்டு, அதில் ஆன்லைன் மோசடி குறித்து தகவல்கள் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்களிடம் சைபர் கிரைம் குறித்து தேவையான அளவு விழிப்புணர்வு இல்லாததால், குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் புதிதாக சைபர் பள்ளிக்கூடம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை முகநூல் நேரலை நிகழ்ச்சி மூலமாக, சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு துறை வல்லுநர்கள் விளக்கமளிப்பார்கள்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா கூறும்போது, "நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் துறை சார்பில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலை பார்ப்பவர்கள் தங்களுக்கு எந்த சந்தேகம் என்றாலும் தொடர்பு கொள்ளலாம்.
சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். ஓடிபி உள்ளிட்ட தகவல்களை யாருக்கும் கூற வேண்டாம். அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீடியோ கால் பேச வேண்டாம். சமீபகாலமாக டிஜிட்டல் கைது என்று கூறி, வங்கி கணக்கிலுள்ள பணத்தை மோசடி ஆசாமிகள் தங்களுடைய வங்கி கணக்குக்கு மாற்றி ஏமாற்றுகின்றனர்.
டிஜிட்டல் கைது என்று கூறி, போலீஸார் யாரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள். மேலும், சைபர் குற்றங்கள் மூலமாக பணம் இழப்பு ஏற்பட்டால், சைபர் கிரைம் உதவி எண் 1930, வலைதள முகவரி https://cybercrime.gov.in-ல் உடனடியாக புகார் அளிக்க வேண்டும்" என்றார். கூடுதல் எஸ்பி மணிகண்டன், டிஎஸ்பி நவீன், சிறப்பு பிரிவு ஆய்வாளர் சுஜாதா உட்பட பலர் உடனிருந்தனர்
0 Comments