ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் துறைக்கு உதவியாக பல்வேறு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் பணிகளுக்கு ஊர்க்காவல்படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தற்போது மாவட்டத்தில் காலியாக உள்ள ஊர்க்காவல்படை பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே ஊர்க்காவல்படையில் சேர விருப்பம் உள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்கள், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஈரோடு மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வருகிற 20-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வழங்கப்பட உள்ளது.என்.எஸ்.எஸ்., என்.சி.சி.யில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வருகிற 21-ந்தேதி மதியம் 2 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எந்தவித குற்ற வழக்குகளும் இருக்கக்கூடாது. ஈரோடு மாவட்டத்துக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்கள் 167 செ.மீ., பெண்கள் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும். 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments