வால்பாறைக்கு டூர் போக திட்டமா.? நவம்பர் 1ஆம் தேதி முதல் புது ரூல்ஸ்- என்ன தெரியுமா.?

Follow Us

வால்பாறைக்கு டூர் போக திட்டமா.? நவம்பர் 1ஆம் தேதி முதல் புது ரூல்ஸ்- என்ன தெரியுமா.?

 சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஊட்டி மற்றும் கொடைக்கானலைப் போலவே வால்பாறைக்கும் நவம்பர் 1, 2025 முதல் இ-பாஸ் முறை அமல்படுத்தப்படுகிறது.

                                                                                


தமிழகத்தில் பல சுற்றுலா இடங்கள் இருந்தாலும் அதிக மக்களின் விருப்பமாக இருப்பது ஊட்டி மற்றும் கொடைக்கானல் தான், இயற்கையை ரசிக்க தினந்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகளவு ஏற்படுவதோடு இயற்கையும் சீரழிந்து வருகிறது.


இதனையடுத்து இந்த சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருபவர்கள் கட்டாயம் ஈ பாஸ் எடுக்க வேண்டும் என விதிமுறை கொண்டவரப்பட்டது. இதன் மூலம் தினந்தோறும் வரும் பணிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு இணையாக உள்ள சுற்றுலா இடம் தான் வால்பாறை, அங்கும் ஏராளமான பயணிகள் தினந்தோறும் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் வருகின்ற நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து வால்பாறைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம். வால்பாறைக்கு வருகின்ற நவம்பர் (01.11.2025) ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. எனவே, நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து வால்பாறைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும். @ https//www.tnepass.tn.gov.in/home என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


மேலும், இ-பாஸ் பதிவு செய்யாமல் வால்பாறைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு எந்தவொரு சிரமமின்றி இபாஸ் பெற்றிடும் வகையில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆழியார் சோதனை சாவடியிலும், கேரளாவிலிருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்குள் வரும் சோலையார் அணை இடதுகரை (மழுக்குப்பாறை வழி) சோதனை சாவடியிலும் இ.பாஸ் பதிவு செய்து, இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். மேலும், சுற்றுலாப் பயணிகள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லவும், பயன்படுத்தவும் அனுமதி இல்லை.

சுற்றுலா பயணிகள் இ.பாஸ் பெற்று வருவதை கண்காணிக்க வருவாய்துறை. உள்ளாட்சித்துறை, காவல்துறை மற்றும் வனத்துறை ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்கள் இந்த இரண்டு சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எனவே வால்பாறை தாலுகாவில் உள்ள முகவரிகளை கொண்ட அனைத்து வாகனங்கள் (சொந்த பயன்பாட்டு வாகனங்களான இரண்டு சக்கரம்,


நான்கு சக்கரம் மற்றும் சுற்றுலா வாகனம்) https://www.tnepass.tn.gov.in/home என்ற இணையதளத்திற்கு சென்று உள்ளூர் பாஸ் (localite pass) ஒரு முறை மட்டும் பதிவு செய்து கொண்டால் போதுமானதாகும். எனவே, கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களுக்கு எதிர்வரும் 01.11.2025 முதல் இ பாஸ் பெற்று பயணம் செய்யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments