இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் தொடங்கி பணப்பரிவர்த்தனை வரை அனைத்திற்கும் செல்போன் என்பதை இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
இப்படி நம் அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த செல்போன் எதிர்பாராத விதமாக தொலைந்து போவதற்கோ அல்லது திருடு போவதற்கோ அதிகமான வாய்ப்புகள் உள்ளது. அந்த சமயத்தில் பலரும் செல்போன் தொலைந்து விட்டால் அதனை கண்டுபிடிக்க முடியாது என அப்படியே விட்டுவிடுவார்கள்.
ஆனால் மத்திய அரசின் செயலி மூலமாக இதுவரை சுமார் 5 லட்சம் தொலைந்து போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசின் தொலைதொடர்பு அமைச்சகம் சஞ்சார் சாத்தி (sanchar saathi) என்ற இணையதளம் மற்றும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. உங்கள் செல்போன் தொலைந்து விட்டால் இந்த இணையதளம் அல்லது செயலியில் இது குறித்து புகார் அளித்தால் அந்த செல்போனை வேறு யாரும் பயன்படுத்த முடியாத வகையில் செயலிழக்க செய்ய முடியும்.
பிறகு செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம். இதில் உங்களுடைய செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். மேலும் உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்ட் இணைப்பு உள்ளது என்பதையும் கண்டறிய முடியும். நீங்கள் அங்கீகரிக்காத சிம் கார்டு உங்களுடைய பெயரில் வாங்கப்பட்டிருந்தால் அது குறித்து புகார் அளித்து செயல் இழக்க செய்ய முடியும்.
மோசடிக்காரர்கள் பெரும்பாலும் போலியான ஆவணங்களை உருவாக்கி அடுத்தவர்களின் பெயரில் சிம்கார்டு வாங்கி அதன் மூலம் குற்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேசமயம் மோசடி செய்யும் நோக்கத்தில் வரும் சந்தேகத்திற்கு இடமான செல்போன் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், whatsapp அழைப்பு குறுஞ்செய்தி தொடர்பாகவும் இதில் புகார் அளிக்கலாம். இந்த செயலி மூலம் இதுவரை ஒரு கோடிக்கு அதிகமான அங்கீகரிக்கப்படாத மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி பெரிதும் உதவியாக இருக்கும் இடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது..
0 Comments