தமிழக அரசின் பெரும்பாலான நலத்திட்ட உதவிகள் குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் தாமாகவே ரேஷன் கார்டில் இருந்து நீங்குவதாகவும், இதனால் பல பிரச்சனைகளை எதிர்கொள்வதாக கூறுகின்றனர் ரேஷன் கார்டுதாரர்கள். குறிப்பாக குடும்ப தலைவர்களின் பெயர் மாறுவது உள்ளிட்டவற்றில் கடும் சிக்கலை சந்திப்பதாக கூறுகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு நலத்திட்ட உதவிகள் குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டுகள் முலமே வழங்கப்படுகிறது. விலையில்லா உணவு பொருட்கள், பொங்கல் பரிசுத்தொகுப்பு, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மற்றும் பல்வேறு அரசின் நலத்திட்டங்கள் ரேஷன் கார்டுகள் மூலமாக வழங்கப்படுகிறது.
மேலும் பல்வேறு திட்டங்களுக்கு முக்கிய அடையாள அட்டையாகவும் ரேஷன் கார்டு இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை சுமார் இரண்டு கோடியே 26 லட்சம் ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. டிஜிட்டல் முறையில் தற்போது அவை ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் 7 கோடியே 46 லட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர். அந்தியோதயா கார்டு வைத்துள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி, பருப்பு, ஜீனி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மற்ற அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் ஒரு குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு உணவு பொருட்கள் வழங்கப்படும் அளவு மாறி மாறி அமையும். குழந்தை பிறப்பு, திருமணம் ஆகியவற்றின் மூலம் புதிய உறுப்பினர்கள் ரேஷன் கார்டுகளை சேர்க்கப்படுவதும், புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பிக்கும் போது ஏற்கனவே குடும்ப அட்டையில் இருப்பவர்களின் பெயர்கள் நீக்கப்படுவது வழக்கம்.
ரேசன் கார்டுகளில் பெயர்களை சேர்க்கும்போது காட்டும் ஆர்வத்தை நீக்குவதற்கு மக்கள் காட்டுவதில்லை. குறிப்பாக குடும்ப உறுப்பினர் யாராவது இறந்தால் அது குறித்த தகவலை பொதுமக்கள் தெரிவிப்பதில்லை. இதனால் இறந்தவர்களுக்கும் உணவு பொருட்கள் கூடுதலாக வழங்கப்படுவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. தற்போது தமிழக அரசின் பல்வேறு துறைகள் இணைக்கப்பட்டு டிஜிட்டல் மையமாக்கப்படும் நிலையில் பிறப்புச் சான்றிதழ், இறப்பு சான்றிதழ் ஆகியவை ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், குடும்பத்தில் யாராவது ஒருவர் இறந்ததாக இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் தானாகவே ஆதார் எண் அடிப்படையில் ரேஷன் கார்டில் இருந்து நீங்குகிறது. அதாவது ஒருவர் இறந்துவிட்டார் என்றால் அவரது ஆதார் எண்ணை கொடுத்து உறவினர்கள் இறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பார்கள். சான்றிதழ் வழங்கப்பட்டு பதிவான உடன் அது தமிழ்நாடு அரசின் உணவு பொருள் வழங்கல் துறைக்கு அனுப்பப்படும். இதை அடுத்து தானியங்கியாகவே அந்த பெயர் நீக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே இந்த நடைமுறை இருப்பதாக சொல்லப்படுகிறது. அடிப்படையில் இது ஒரு நல்ல திட்டம் என்றாலும் சில சிக்கல்களையும் மக்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது. குடும்பத் தலைவர் ஒருவேளை இறந்து விட்டால் அந்த ரேஷன் கார்டில் இருக்கும் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் தானியங்கியாகவே யாராவது ஒருவர் குடும்பத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் புகைப்படம் மாற்றப்படுவதில்லை. இதனால் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.
மேலும் புகைப்படத்தை மாற்றவும் அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட வேண்டி இருக்கிறது. இதற்கு கால தாமதமும் ஆகிறது. எனவே தானியங்கி பெயர் நீக்கும் முறையை கைவிட்டு இறந்தவர்களின் பெயரை நீக்க வேண்டும் என பயனாளிகளை அறிவுறுத்தலாம் எனவும், இதன்மூலம் பொதுமக்கள் தாங்களாகவே ரேஷன் கார்டில் பெயர்களை மாற்றி குடும்ப தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் என கூறுகின்றனர் பொதுமக்கள்.
0 Comments