தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி (B.Sc) மற்றும் பிஓடி (BOT), பிபிடி (BPT), இளநிலை மருந்தியல் (Bachelor of Pharmacy), பார்ம்.டி (Pharm.D), டிப்ளமோ நர்சிங் (பெண்கள்) ஆகிய பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பப் பதிவு இன்று (ஜூன் 17) தொடங்கியது.
மேலும், மாணவர்கள் சேர்க்கைக்கான தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் www.tnmedicalselection.org என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மாணவர்கள் நேரில் சென்று விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2025 - 2026ஆம் கல்வியாண்டில், 19 அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த 19 பட்டப்படிப்புகளில் 2,536 இடங்கள் உள்ளன. மேலும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 4 விதமான பட்டப்படிப்புகளில், 22,200 இடங்கள் உள்ளன. அவற்றில் 14,157 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது.
சேர்க்கை இடங்கள்:
பி.எஸ்சி நர்சிங் பட்டப் படிப்பில் சென்னை, மதுரை, செங்கல்பட்டு, சேலம், தேனி, கடலூர் ஆகிய 6 மருத்துவக் கல்லூரிகளில் 350 இடங்கள் உள்ளன. இளநிலை மருந்தியல் (Bachelor of Pharmacy) 4 ஆண்டுக்கால பட்டப்படிப்பில் சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 120 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
டிப்பளமோ நர்சிங் பெண்களுக்கான பட்டயப் படிப்பில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2060 இடங்கள் உள்ளன. பார்ம் டி எனப்படும் பார்மசி பட்டயப் படிப்புகள் சுயநிதிக் கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கான தகுதி:
மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு, தமிழ்நாடு அரசு அல்லது அதற்கு சமமான குழுமத்தால் நடத்தப்படும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.
கட்டணம் விவரம்:
அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக் கல்விக் கட்டணமாக 3 ஆயிரம் செலுத்த வேண்டும். தனியார் சுயநிதிக் கல்லூரியில் சேரும் மாணவர்கள் பி.பார்ம் படிப்பிற்கு 43 ஆயிரமும், பி.எஸ்சி நர்சிங் படிப்பிற்கு 45 ஆயிரம், பிபிடி, பிஓடி படிப்பிற்கு 33 ஆயிரமும் ஆண்டிற்கு கல்விக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
பிஎஸ்சி, பிபார்ம், பிபிடி, பிஒடி உள்ளிட்ட 19 பட்டப் படிப்புகளிலும், பார்ம் டி , டிப்ளமோ நர்சிங் (பெண்கள்) சேர்வதற்கு இன்று ஜூன் 17ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரையில் www.tnmedicalselection.net என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான சேர்க்கை முறை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments