மே 30 தான் கடைசி..! கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு உடனே விண்ணப்பீங்க..!

 ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில், இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 30.05.2025 தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

                                                                        



ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், சுகாதாரமற்ற தொழில் புரிவோர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் (சாதி மற்றும் வருமான வரம்பு ஏதுமின்றி) உள்ளிட்ட பல கல்வி உதவித் தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதில், 2024-25 கல்வி ஆண்டிற்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் பிற கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுவரை கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்காத ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த மாணக்கர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 30.05.2025 தேதியே கடைசி நாள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி?
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்கள் UMIS (University Management Information System) என்ற https://umis.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், கல்லூரி நிர்வகங்களின் மூலமும் கல்வி உதவித்தொகைக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

2024-2025-ஆம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மாணாக்கர்கள் மற்றும் சென்ற வருடத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal Officer) அணுகி UMIS (https://umis.tn.gov.in/ ) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

  • வருமானச் சான்றிதழ் (பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்).
  • சாதிச் சான்றிதழ் (வருமானச் சான்று மற்றும் சாதிச் சான்று ஆகியவை இணைய சான்றுகளாக இருத்தல் அவசியம். இணைய சான்றுகளை பெற அருகிலுள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்).
  • மாணாக்கரின் ஆதார் எண்ணுடன் மாணாக்கர்களின் வங்கிக் கணக்கு எண் இணைக்கப்பட்டிருக்க (seeding) வேண்டும். அந்த வங்கிக் கணக்கு செயல்பாட்டில் (Active) உள்ள கணக்காக இருக்க வேண்டும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் உடனடியாக ஆன்லைன் வழியாக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments