திருவண்ணாமலை: குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 437 பணியிடங்களுக்கு ஏப்.23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 131 அங்கன்வாடி பணியாளர், 54 குறு அங்கன்வாடி பணியாளர், 252 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரங்கள், மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் அந்தந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகங்களின் தகவல் பலகையில் ஒட்டப்படும்.
www.icds.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பத்தை ஏப். 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொகுப்பூதியில் பணி நியமனம் செய்யப் படுபவர்கள், 12 மாத கால பணிக்கு பிறகு, சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் வழங்கப்படும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு பிளஸ்-2 தேர்ச்சியும், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் சரளமாக எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 25 வயது முதல் 35 வயதும், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தினருக்கு 25 வயது முதல் 40 வயதும், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 வயது முதல் 38 வயதும் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 20 வயது முதல் 40 வயதும், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தினருக்கு 20 வயது முதல் 45 வயதும், மாறறுத்திறனாளிகளுக்கு 20 வயது முதல் 43 வயதும் இருக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள குழந்தைகள் மையத்துக்கு நியமனம் கோரி விண்ணப்பவர்கள் அதே கிராமம் மற்றும் வார்டுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்” என்றார்.
0 Comments