இடைநிலை ஆசிரியர் தேர்வு ஆன்சர் கீ வெளியீடு; டவுன்லோடு செய்வது எப்படி?

 இடைநிலை ஆசிரியர் தேர்வு முடிந்து 7 மாதங்களுக்குப் பிறகு தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

                                                                                


இதனை எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை இப்போது தெரிந்துக் கொள்வோம்.


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 1768 காலிப்பணியிடங்கள் அடங்கிய இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை 09.02.2024 அன்று வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து 15.03.2024 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 26,510 பேர் இந்த இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.


இதனையடுத்து 16.07.2024 அன்று இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 1,000 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், இடைநிலை ஆசிரியர் பதவிக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 2,768 ஆக உயர்ந்தது. இதனைத்தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி இதற்கான தேர்வு நடைபெற்றது.

இதனையடுத்து நியமனத் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு செயல்முறையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இதனையடுத்து தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விடைக்குறிப்புகளையும், தேர்வு முடிவுகளையும் உடனடியாக வெளியிட தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.


இந்நிலையில், தேர்வு நடைபெற்று 7 மாதங்கள் கடந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது 16.07.2024 அன்று கூடுதலாக சேர்க்கப்பட்ட 1,000 காலிப்பணியிடங்களின் இடஒதுக்கீடு விவரங்கள் வெளியிட்டப்பட்டன.

இந்தநிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (28.03.2025) இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது. 


இடைநிலை ஆசிரியர் தேர்வு விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?


படி 1: அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://trb.tn.gov.in/ என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்,


படி 2: சமீபத்திய புதுப்பிப்புகளில் இடைநிலை ஆசிரியர் தேர்வு விடைக்குறிப்புகள் என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.


படி 3: தோன்றும் புதிய பக்கத்தில் கடைசியில் உள்ள இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.

படி 4: இப்போது உங்கள் உள்நுழைவு சான்றுகளை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.


படி 5: இப்போது திரையில் உங்களுக்கான விடைக்குறிப்புகள் காண்பிக்கப்படும். பதிவிறக்கம் செய்து, உங்களுடைய விடைகளை சரிபார்த்துக் கொள்ளவும்.


விடைக்குறிப்புகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், 03.04.2025க்குள் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் மூலமாக ஆதாரங்களுடன் உங்கள் கோரிக்கைகளை பதிவு செய்யலாம்.




Post a Comment

0 Comments