ஆன்லைன் பட்டா .. இ சேவை மையத்தில் விண்ணப்பிக்கிறீங்களா.. உயர்நீதிமன்றம் போட்ட சூப்பர் உத்தரவு

 ஆன்லைனில் பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களின் கோரிக்கையை மறுக்கும் முன்பு சில விஷயங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

                                                                            


அதன்படி பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்காமல், ஆவணங்களை பரிசீலிக்காமல் கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது

ஆன்லைன் பட்டாவிற்கு விண்ணப்பிக்கும் போது பல்வேறு காரணங்களை கூறி அதிகாரிகள் நிராகரிப்பார்கள்.. அப்படி நிராகரிக்கப்படும் போது, அதை எதிர்த்து நிவாரணம் பெற முடியாத நிலையில் பல சாமானியர்கள் இருக்கிறார்கள்.இந்நிலையில் மதுரை மேலூரைச் சேர்ந்த தினகரன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஆன்லைன் பட்டா தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.

விசாரிக்கவே இல்லை


அந்த மனுவில் தினகரன் என்பவர் கூறுகையில், "சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள என் சொத்துக்கு பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் எனது விண்ணப்பத்தை நிராகரித்து சிவகங்கை தாலுகா வட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு பிறப்பிக்கும் முன்பு வருவாய் அலுவலர்கள் என்னை முறையாக விசாரிக்கவில்லை. எந்த ஆவணங்களையும் கேட்கவில்லை. எனவே வட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் தினகரன் கூறினார்.

ஆன்லைன் பட்டா விளக்கம்


இந்த மனு நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "பட்டா கோரி ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, அந்த விண்ணப்பத்தின் முடிவு ஆன்லைன் வழியாகவே தெரிவிக்கப்படும்." என்று கூறப்பட்டது. மேலும், "ஆன்லைன் விண்ணப்ப முறை இப்படித்தான் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் வருவாய் அலுவலர்களை நேரில் சந்திக்கும் போது விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். அதன் பிறகு அந்த உத்தரவு தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம்," என்றும தெரிவிக்கப்ட்டது.

பட்டா விண்ணப்பம் நிராகரிப்பு


இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி பாலாஜி, "ஏற்கெனவே உயர் நீதிமன்றம் ராணி என்பவர் தொடர்ந்த வழக்கில், பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்காமல், ஆவணங்களை பரிசீலிக்காமல் கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது என உத்தரவிட்ப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரரை விசாரிக்காமல் அவரது ஆன்லைன் பட்டா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

வட்டாட்சியர்


எனவே இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இதனால் மனுதாரரின் மனு மீண்டும் வட்டாட்சியருக்கு அனுப்பப்படுகிறது. வட்டாட்சியர் மனுதாரரிடம் விசாரணை நடத்தி ஆவணங்களை பரிசீலித்து 8 வாரத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தமிழகத்தில் எதிர்காலங்களில் பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது உயர் நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வருவாய் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட வேண்டும். இதற்காக இந்த உத்தரவு நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர் நீதிமன்ற பதிவுத்துறை அனுப்ப வேண்டும்," என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவு


முன்னதாக, மார்ச் 20 அன்று எடுத்துக்கொள்ளப்பட்ட கோமதி என்பவரின் மனு மீதான விசாரணையில், இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கும் மனுக்களை முறையாகப் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மனுதாரர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், அண்மைக்காலமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டு வருகிறது என்றும் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. நீதிமன்ற உத்தரவுகளை முறையாகப் பின்பற்றி பட்டா வழங்க அரசு அலுவலர்கள் முன்வரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.




Post a Comment

0 Comments