நகரங்களை ஒட்டியுள்ள ஊராட்சி மக்களுக்கும், நகரங்களில் உள்ள வசதிகளை செய்து கொடுப்பதற்காக, அவற்றை நகரங்களுடன் இணைத்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்தும் பணி நடந்து வருகிறது.
இந்த பணி முடியும்போது, தமிழகத்தில், 25 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள், 491 பேரூராட்சிகள் இருக்கும் என்று, சமீபத்தில் சட்டசபையில் அமைச்சர் நேரு அறிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. கடந்த 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தொகை கூடுதலாக உயர்ந்துள்ளது.
பெருகிவரும் மக்கள் தொகை
எனவே, பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை தமிழக அரசு மறுசீரமைத்து வருகிறது .
நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நகர்ப்புறத்தினை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நகரமயமாக்கலின் தன்மையினை பொறுத்து, கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்தும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்துதல் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள்
இதில், மக்களுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கும், திட்டமிட்ட வளர்ச்சிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு அவசியமாகிறது.. அதேபோல, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சுற்றி அமைந்துள்ள பகுதிகளுக்கும், நகர்ப்புறங்களுக்கு இணையான வகையில் சாலைகள், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை, பொது, சமுதாய பயன்பாட்டிற்கான நவீன கழிப்பிடங்கள், பாதாளச் சாக்கடை 2 கட்டமைப்பு, ஆற்றல்மிகு தெருவிளக்குகள் போன்ற மக்களுக்கான இன்றியமையாத அடிப்படை வசதிகளை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது.
இதை அடிப்படையாக கொண்டு, கடந்த 2021ம் ஆண்டு 6 புதிய மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தன.. கடந்த ஜனவரி மாதமும், தமிழ்நாட்டில் 13 புதிய நகராட்சிகள், 25 பேரூராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
7 புதிய நகராட்சிகள்
அதுபோலவே, இப்போது மீண்டும் 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.. பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த 7 புதிய நகராட்சிகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் 7 புதிய நகராட்சிகளை உருவாக்கி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் சட்டப்பேரவையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய 3 தேர்வு நிலை நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.
0 Comments