ஆர்.சி., ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரியை ஆதார் அடிப்படையில் புதுப்பிப்பது கட்டாயமாகிறது

 வாகன ஆர்.சி., ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரியை ஆதார் அட்டை அடிப்படையில் புதுப்பிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



சாலை பாதுகாப்பு தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற மாநாட்டில், மத்திய சாலை போக்குவரத்துத் துறை செயலாளர் வி.உமாசங்கர் பேசியதாவது: சாலை விதிகளை மீறியதாக அனுப்பப்பட்ட ரூ.12 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான மின்னணு சலான்கள் நிலுவையில் உள்ளன. சாரதி மற்றும் வாஹன் இணையதளங்களில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) தரவுகள் பல பத்தாண்டுகளுக்கு முன்பு பதியப்பட்டவை ஆகும். அவற்றில் பலவற்றில் ஆதார் எண்களோ, செல்போன் எண்களோ இல்லை. இதனால் அவர்களை அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது.

எனவே, ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி. புத்தகம் வைத்திருப்பவர்கள் அதன் முகவரியை ஆதார் எண் அடிப்படையில் புதுப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன்மூலம் மின்னணு சலான்களை செலுத்தாதவர்களை எளிதாக அடையாளம் கண்டு அபராதத் தொகையை வசூலிக்க முடியும். அவ்வாறு செலுத்தாதவர்களின் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவை சஸ்பெண்ட் அல்லது ரத்து செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

Post a Comment

0 Comments